search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன் தொல்லை"

    • மாரியப்பன் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
    • மாரியப்பன், சித்ரா தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இரணியல்:

    மதுரை பில்லாபுரம் துளசிராம் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 55), தச்சுதொழிலாளி. இவரது மனைவி சித்ரா (50). இவரது மகன் மாதேஸ்வரன் (23). இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் பாக்கியராஜ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்பொழுது மாரியப்பன்-சித்ரா தம்பதியினர் குமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    மாரியப்பன் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் மாரியப்பனிடம் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுக்க தொடங்கினார்கள். ஆனால் மாரியப்பனால் பணத்தை திரும்பிக்கொடுக்க முடியவில்லை. இதனால் மாரியப்பன் மனமடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை மாரியப்பன் வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் வந்துள்ளார். அப்போது அவர் மாரியப்பனின் வீட்டின் கதவை தட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் கதவு திறக்கப்படவில்லை. அப்போது வீட்டின் கதவு வழியாக பார்த்தபோது மாரியப்பன் மற்றும் அவரது மனைவி சித்ரா இருவரும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    மாரியப்பன் மற்றும் அவரது மனைவி சித்ரா தற்கொலை செய்து கொண்டது குறித்து சென்னையில் உள்ள அவரது மகனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    சென்னையில் இருந்து மாதேஸ்வரன் ஊருக்கு வந்து கொண்டிருக்கிறார். மாரியப்பன், சித்ரா தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இரணியல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கரீப் சாப் என்பவர் கறிக்கடை நடத்தி வந்தார். கடையில் கிடைக்கும் வருமானம் அவருக்கு போதுமானதாக இல்லை.
    • கரீப் சாப் தனக்கு தெரிந்தவர்களிடம் மீட்டர் வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.

    கர்நாடக மாநிலம் தும்கூர் சதாசிவா நகரை சேர்ந்தவர் கரீப் சாப் (32). இவரது மனைவி சுமையா (30). இவர்களுக்கு ஹாஜிரா (14) என்ற மகளும், முகமது சுபான் (10), முகமது முனீப் (8) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    கரீப்சாப் அந்த பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். கடையில் கிடைக்கும் வருமானம் அவருக்கு போதுமானதாக இல்லை. இதனால் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டு வந்தார். இந்த நிலையில் கரீப் சாப் தனக்கு தெரிந்தவர்களிடம் மீட்டர் வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வியாபாரம் சரியாக நடக்காததால் கரீப் சாப்பால் வாங்கிய கடனுக்கு சரியாக வட்டி செலுத்த முடியவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு அவருக்கு தொல்லை கொடுத்தனர். பணத்தை செலுத்த முடியாத கரீப் சாப் தனது மனைவியிடம் இதுகுறித்து தெரிவித்து உள்ளார். பின்னர் கணவன், மனைவி 2 பேரும் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று இரவு கரீப்சாப் மற்றும் அவரது மனைவி சுமையா ஆகியோர் உணவில் விஷம் கலந்து தனது 3 குழந்தைகளுக்கும் கொடுத்தனர். உணவில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் சாப்பிட்ட 3 குழந்தைகளும் படுக்க சென்றனர். பின்னர் தூக்கத்திலேயே அவர்கள் பலியானார்கள்.

    இதையடுத்து கரீப்சாப் செல்போன் மூலம் ஒரு வீடியோ எடுத்தார். அதில் கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் விரக்தி அடைந்த நான் 3 குழந்தைகளை விஷம் வைத்து கொன்று விட்டு நானும், எனது மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று தெரிவித்து இருந்தார். மேலும் கடன் கேட்டு தொல்லை கொடுத்த சிலரது பெயர்களையும் தெரிவித்து இருந்தார். 5 நிமிட வீடியோவாக எடுத்து அதை உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதோடு இல்லாமல் 2 பக்கத்தில் உருக்கமான கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார்.

    பின்னர் கரீப் சாப் மற்றும் அவரது மனைவி சுமையா ஆகியோர் வீட்டின் ஹாலில் முகத்தை துணியால் மூடி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தெரிய வந்ததும் திலக்பார்க் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கரீப் சாப் வெளியிட்ட வீடியோ மற்றும் உருக்கமான கடிதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.1 லட்சம் கடன் தொல்லைக்கு பயந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மாரிமுத்துவுக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.
    • கடந்த 8-ந்தேதி மதுவில் விஷம் கலந்து குடித்து மாரிமுத்து மயங்கி கிடந்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி சந்தனமாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 48). தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். மாரிமுத்துவுக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 8-ந்தேதி மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு அவர் இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடனை கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு கொடுக்க தொடங்கி உள்ளனர்.
    • தொழில் நஷ்டத்தால் தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வடவள்ளி:

    கோவை விளாங்குறிச்சி, எஸ்.ஆர். அவென்யூவை சேர்ந்தவர் வித்யா சங்கர் (வயது 44). தொழில் அதிபர்.

    இவருக்கு திருமணம் ஆகி பிந்து என்ற மனைவியும், 15 வயதில் ராகவ் என்ற மகனும் உள்ளனர்.

    வித்யா சங்கர் திருப்பூரில் சொந்தமாக நூல் தயாரித்து விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். வித்யா சங்கர் தனது தொழிலை மேலும் விரிவுபடுத்துவதற்காவும், தொழிலுக்காகவும், வங்கி மற்றும் தனக்கு தெரிந்த நபர்களிடம் இருந்து கடன் வாங்கி இருந்தார். மொத்தமாக ரூ.42 கோடி வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    வாங்கிய கடனுக்கு மாதம் தவறாமல் குறிப்பிட்ட நாட்களிலும் பணத்தையும் செலுத்தி வந்தார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவருக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையே கடனை கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு கொடுக்க தொடங்கி உள்ளனர்.

    தினமும் போன் போட்டு தொந்தரவு செய்ததால் வித்யா சங்கர் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று வழக்கம் போல் வீட்டில் இருந்து தனது காரில் கம்பெனிக்கு புறப்பட்டார்.

    ஆனால் அவர் திருப்பூருக்கு செல்லாமல் நேராக தொண்டாமுத்தூர் குள்ளாகவுண்டன்புதூர் பகுதிக்கு சென்று தனது காரை நிறுத்தினார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும், கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொந்தரவு கொடுத்து வந்ததாலும் மன உளைச்சலில் இருந்த வித்யா சங்கர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

    இதையடுத்து அவர், ஆன்லைனில் விஷம் ஆர்டர் செய்து வாங்கினார். பின்னர் காரின் பின் இருக்கையில் அமர்ந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    இந்த நிலையில் காலையில் இருந்து மாலை வரை அந்த பகுதியிலேயே கார் நின்றதாலும், போன் அடித்தும் யாரும் எடுக்காததாலும் அந்த பகுதி பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    உடனடியாக அவர்கள் சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் காருக்குள் ஏறி பார்த்த போது, அங்கு வித்யாசங்கர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து வித்யா சங்கரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    போலீசார், வித்யா சங்கரின் காரில் இருந்த லேப்-டாப், டைரி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, சோதனையிட்டனர். அப்போது டைரியில் வித்யா சங்கர் தான் யாரிடம் எல்லாம் இருந்து கடன் பெற்றுள்ளேன் என்பது குறித்தும், அந்த நபர்களின் பெயர்களையும் விரிவாக எழுதியிருந்தார்.

    அந்த தகவல்களை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் நஷ்டத்தால் தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கொண்டு நகை பறித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
    • கடனை அடைக்க நகைப் பறிப்பில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கணவனை தூண்டியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மதுரை:

    மதுரை அவனியாபுரம் சந்தோஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி ஞானசுதன் சீலி. இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் கடையில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மிளகாய் பொடியை தூவி ஞானசுதன் சீலி அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து சென்றார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி துணை கமிஷனர், உதவி கமிஷனர் ஆலோசனைப்படி அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் பொருத்தப் பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கொண்டு நகை பறித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆனந்தகுமார் (வயது 34) மற்றும் அவரது மனைவி கவிதா ஆகிய இருவரும் திட்டமிட்டு 20 நாட்களாக கடையை நோட்டமிட்டு இந்த நகை பறிப்பு சம்பவத் தில் ஈடுபட்டுள்ளனர் என் பது தெரிய வந்துள்ளது.

    மேலும் மனைவி கவிதா அதிகமான கடன் தொல்லை இருப்பதால் எப்படியாவது கடனை அடைக்க நகைப் பறிப்பில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கணவனை தூண்டியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் 9 பவுன் நகையை மீட்டு வேறு ஏதாவது நகை பறிப்பு, திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா, அவர்களுக்கு உடந்தையாக வேறு நபர்கள் இருக்கிறார்களா என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கடனுக்கு மேல் கடன் வாங்கியதால் கடந்த 2020-ம் ஆண்டு குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது.
    • ஓட்டேரியை சேர்ந்த லட்சுமிபதி என்பவர், கீதாகிருஷ்ணனின் வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான் அவர் மகளுடன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

    அம்பத்தூர்:

    சென்னை அயனாவரம் பூசனம் தெருவில் வசித்து வந்தவர் கீதா கிருஷ்ணன். 52 வயதான இவர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்கள் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.

    கீதா கிருஷ்ணன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். ரம்மி விளையாட்டில் அவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இதனால் கடன் தொல்லை அதிகமாகி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. கணவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இருந்து மீளாமல் கடனுக்கு மேல் கடன் வாங்கியதால் கடந்த 2020-ம் ஆண்டு குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது.

    அப்போது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள கீதாகிருஷ்ணன் திட்டமிட்டார். இதற்காக தனது மூத்த மகள் குணாலினியை கழுத்தை நெரித்து அப்போது கொன்றுள்ளார்.

    மனைவி கல்பனா தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார். இதன் பின்னர் திடீரென கீதா கிருஷ்ணனின் மனம் மாறியது. அவர் தற்கொலை செய்யும் முடிவை கைவிட்டு விட்டு இளையமகள் மானசாவுடன் திருப்பதிக்கு சென்று தலை மறைவானார். அதன்பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வந்த கீதா கிருஷ்ணன் இளைய மகள் மானசாவுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் விளையாட்டு மோகத்தில் கீதா கிருஷ்ணனின் கழுத்தை கடன் தொல்லை நெறுக்கியது.

    இதையடுத்து இளைய மகள் மானசாவை நேற்று இரவு கழுத்தை நெரித்து கொன்ற கீதாகிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஓட்டேரியை சேர்ந்த லட்சுமிபதி என்பவர், கீதாகிருஷ்ணனின் வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான் அவர் மகளுடன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அயனாவரம் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ் பத்திரியில் அனுமதித்தனர்.

    கல்பனா தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில், கீதாகிருஷ்ணன் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பணியாளராக இருந்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நிலையில் 2 பெண் குழந்தைகள் பிறந்த பின்னர் குடும்பத்தில் சந்தோஷம் களைகட்டியே இருந்து உள்ளது.

    ஆனால் கீதாகிருஷ்ணன் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான பின்னர் புயல் வீசத் தொடங்கி உள்ளது.

    இதைத்தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டு... கடன் தொல்லை ஆகியவற்றால் குடும்பமே பரிதாபமாக பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கீதாகிருஷ்ணன் தான் வசித்து வந்த வீட்டை லீசுக்கு விடுவதாக லட்சுமிபதியிடம் ரூ.2.5 லட்சம் பணம் வாங்கி உள்ளார். ஆனால் லீசுக்கு விடாமல் இழுத்தடித்ததால் லட்சுமி பதி பணத்தை திரும்ப கேட்பதற்காக சென்ற போதுதான் தற்கொலை சம்பவம் வெளியில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

    • வேதமூர்த்தி, அவரது மனைவி சூர்யாவும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். இவரது மகன் வேதமூர்த்தி (வயது38). இவர் ஒரு பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேதமூர்த்தி அவரது உறவினர் பெண்ணான சூர்யா (24) என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமுருகன் வீட்டின் அருகே தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    இந்த நிலையில் வேதமூர்த்தி தனக்கு தெரிந்தவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். ஆனால், அவருக்கு போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்தாமல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் வேதமூர்த்தியிடன் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளதாக தெரிய வந்தது.

    இதுகுறித்து வேதமூர்த்தி தனது தந்தை திருமுருகனிடம் தெரிவித்தபோது, தன்னிடம் உள்ள நிலத்தை விற்று கடனை அடைக்கலாம் என்று கூறி சமாதானம் பேசியுள்ளார்.

    இருந்த போதிலும் மனவேதனையில் இருந்த வேதமூர்த்தி, தனது வீட்டில் நேற்று இரவு தூங்க சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை நீண்டநேரமாகியும் வேதமூர்த்தியும், அவரது மனைவி சூர்யாவும் வீட்டில் இருந்து வெளியே வராமல் கதவு மூடியபடி இருந்தது.

    இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வேதமூர்த்தியின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் வெளியே வராததால், உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வேதமூர்த்தியும், அவரது மனைவி சூர்யாவும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

    இதனை கண்ட உறவினர்கள் அதிச்சியடை ந்தனர். அப்போது அவர்கள் இருவரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால், வேதமூர்த்தி வீட்டின் முன்பு பொது மக்கள் திரண்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேதமூர்த்தி, சூர்யா ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடன் தொல்லையால் கணவன்-மனைவி இருவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிறகு, ஆரம்பித்த தொழிலில் பிரகாஷ்க்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • தீபிகா, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? குடும்பத் தகராறு காரணமா?

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). இவர் வெளிநாட்டிற்கு சென்று திரும்பி வந்து உள்ளூரிலேயே தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிளஸ்-2, 10-ம் வகுப்பு பயிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிறகு, ஆரம்பித்த தொழிலில் பிரகாஷ்க்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கடன் அதிகரித்து பிரகாஷ்க்கும் அவரது மனைவி தீபிகாவிற்கும் (35) இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தீபிகா தொங்கினார். இதனைக் கண்ட அவரது பெண் குழந்தைகள் கதறி அழுதபடி தந்தை பிரகாஷிடம் கூறினர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மரக்காணம் போலீசார், தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலை செய்து கொண்ட தீபிகா, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? குடும்பத் தகராறு காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் ராஜேஷின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
    • போலீசார் ராஜேஷின் மனைவிக்கு பணம் கொடுத்த ஆசிரியரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது34). என்ஜினீயர்.

    இவரது மனைவி லக்ஷயா (29). பட்டதாரி. இவர் பிரெஞ்சு மொழியில் பட்டம் பெற்று உள்ளார். இவர்களுக்கு யக்சிதா (10) என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்களுடன் ராஜேஷின் தாய் பிரேமா (74) என்ப வரும் வசித்து வந்தார். 6 மாதங்களுக்கு முன்பு தான் இவர் குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறினார்.

    கடந்த 3 நாட்களுக்கும் மேலாக ராஜேசின் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. நேற்று மாலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், லக்ஷயா, யக்சிதா, பிரேமா ஆகியோர் விஷம் குடித்த நிலையிலும் இறந்து கிடந்தனர்.

    போலீசார் ராஜேஷின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அறையில் என்ஜினீயர் ராஜேஷ் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    என்ஜினீயர் ராஜேஷின் மனைவி லக்ஷயாவுக்கு, சின்மயா நகரை சேர்ந்த ஆசிரியரின் நட்பு கிடைத்தது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்நிலையில் அந்த ஆசிரியரிடம் தனது தேவைக்காக லக்ஷயா பணம் கேட்டுள்ளார். அவர் அடிக்கடி அவருக்கு பணம் கொடுத்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்த பணம் மட்டுமின்றி தனது நண்பர் ஒருவரிடம் இருந்தும் பணத்தை வாங்கி லக்ஷயாவுக்கு கொடுத்தார். இதுவரை ரூ.31 லட்சம் கொடுத்துள்ளார்.

    இதற்கிடையே ஆசிரியருக்கு பணம் கொடுத்த அவரது நண்பர் பணம் கேட்கவே, 2 பேரும் லக்ஷயாவிடம் சென்று பணத்தை கேட்டுள்ளனர். அவர் சரியான பதில் சொல்லவில்லை என தெரிகிறது. இதையடுத்து 2 பேரும் லக்ஷயாவின் கணவர் ராஜேசை சந்தித்து, உனது மனைவிக்கு நாங்கள் பணம் கொடுத்துள்ளோம். அதற்கான ஆதாரம் என பணம் அனுப்பியதற்கான வங்கி பரிவர்த்தணையை காண்பித்தனர்.

    இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பணம் கொடுத்தவர்கள், அதனை கேட்டு தொந்தரவு கொடுக்கவே, ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ராஜேஷின் மனைவிக்கு பணம் கொடுத்த ஆசிரியரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆசிரியரின் நண்பரையும் விசாரிப்பதற்காக அவரையும் தேடி வருகின்றனர்.

    • வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, போலீசார் சோதனை நடத்தினர்.
    • தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதில், பொறியாளர் ராஜேஷ், அவரது மனைவி லக்ஷயா, 10 வயது மகள் யக்ஷிதா, ராஜேஷின் தாயார் பிரேமா ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, போலீசார் சோதனை மேற்கொண்ட நிலையில் 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராஜேஷ் தூக்கிட்டும், மற்ற மூன்று பேர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

    மேலும், கடன் தொல்லை காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடன் தொல்லையால் பிளாஸ்டிக் கவரை முகத்தில் மூடி கொண்டு நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்டனர்.
    • பழனிவேல் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி அருகே ஒட்டப்பட்டியில் உள்ள பழைய ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவரது மனைவி சாந்தி (வயது50). இவரது மகன் விஜயஆனந்த் (30). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் என்ஜினீரியங் படித்து முடித்து விட்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். அப்போது அவரது நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் தனியாக ஒரு நூற்பாலை ஒன்றையும் நடத்தி வந்தார். இதற்காக அவர் தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் நடத்தி வந்த நூற்பாலையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால், அந்த நிறுவனத்தை மேலும் தொடர முடியாமல் இழுத்து மூடிவிட்டனர்.

    இந்த நிலையில் விஜயஆனந்திற்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு வந்தனர். ஆனால், நூற்பாலை மூடிவிட்ட காரணத்தினால் அவரால் கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.

    நூற்பாலையை மூடிவிட்டதால் அதில் முதலீடு செய்த பங்கு தொகையும், மேலும், அவர் சிலரிடம் கடனாக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்காததால் தனக்கு கடன் கொடுத்தவர்களிடம் கடன் தொகை முழுவதையும் திரும்ப கொடுக்க முடியாமல் அவதிக்குள்ளானார்.

    இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு விஜயஆனந்தை தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் அவர் மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த விவரங்கள் அனைத்தும் தனது தாய் சாந்தியிடம் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பழனிவேல் நேற்று காலை பாலக்கோட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தாய் சாந்தி, மகன் விஜயஆனந்த் ஆகிய 2 பேரும் வீட்டை பூட்டி கொண்டு அவர்களது முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு டியூப் வழியாக நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்துகொண்டனர்.

    இந்த விவரங்கள் ஏதும் அறியாத பழனிவேல் நேற்று இரவு வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் கதவை தட்டியும் யாரும் வராததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முகத்தில் பிளாஸ்டிக் கவர் மூடியபடி சாந்தியும், விஜயஆனந்தும் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

    இதுகுறித்து பழனிவேல் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தியதில் கடன் தொல்லை தாக்காமல் விஜயஆனந்த் தற்கொலை செய்து கொள்ளும்முடிவை எடுத்துள்ளார்.

    இதுகுறித்து தனது தாய்க்கு தெரிவித்தபோது ஒரே மகனை இழுந்து என்ன செய்வதென்று தெரியாததால் அவரும் தனது மகனுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து 2 பேரும் தங்களது முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடிக் கொண்டு நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடன் தொல்லையால் தாய், மகன் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • புதிய வீடு கட்டியதால் கடன் தொல்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த அப்துல்லாபுரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 27). இவர் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (23). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் புதிய வீடு கட்டி வருகின்றனர். வீடு கட்டுவதற்காக சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப கேட்டுள்ளனர். இந்த நிலையில் செந்தமிழ்ச்செல்வி காஞ்சிபுரத்தில் உள்ள அவரது தந்தைக்கு தொலைபேசி மூலம் எங்களை தேட வேண்டாம் என்று சொல்லிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து உள்ளார்.

    இது குறித்து அவரது தந்தை அதே பகுதியில் வசிக்கும் மகனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது வீடு திறந்த நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார்.

    பின்னர் அவர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் தூசி போலீஸ் நிலையத்தில் செந்தமிழ் செல்வியின் அண்ணன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ராஜசேகர் மற்றும் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

    ×